இந்தியா

"பெட்ரோல் மீதான 200%, டீசல் மீதான 500% கலால் வரியை குறைத்திடுக" - பிடிஆர் தியாகராஜன்

Veeramani

பெட்ரோல் - டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்திய நிலையில், மத்திய அரசு எரிபொருள்கள் மீதான கலால் வரியை முதலில் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நேற்று காணொளி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டுமென வலியுறுத்தினார். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்காமல் அடம்பிடிப்பதால், மக்களுக்கு அதிக சுமை ஏற்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.



பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து, கடந்த 8 ஆண்டுகளாக பெட்ரோல் - டீசல் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரி விகிதங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். இந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி சுமார் 200 சதவிகிதமும், டீசல் மீதான கலால் வரி 500 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டியுள்ளார். உயர்த்தப்பட்ட கலால் வரி விகிதத்தை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறைக்குமாறு பிரதமரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க:பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மாநிலங்களை குற்றஞ்சாட்டிய பிரதமருக்கு உத்தவ் தாக்கரே பதில்