இந்தியா

கேரளாவில் தொடரும் கனமழை - 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

webteam

கேரளாவில் கனமழை நீடித்து வரும் சூழலில், மாநிலத்தில் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. தொடர் மழையால், குட்டிக்கானம், தொடுபுழா உள்ளிட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, மழை பாதிப்புகளை சமாளிக்கவும், மீட்புப் பணிகளை உடனே மேற்கொள்வது தொடர்பாகவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார்.

ஆறுகள், நீர்நிலைகள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இரவு நேர பயணங்களை தவிர்க்குமாறும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். பேரிடர் ஏற்பட்டால், அதை சமாளிக்கும் வகையில் காவல்துறையினர், தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்தில் இருந்து கேரளாவுக்கு 4 குழுக்கள் விரைந்துள்ளன. இக்குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.