மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றும் அதிதீவிர மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் பெய்து வரும் கன மழையால், ரயில் நிலையங்களிலும், சுரங்கப் பாதைகளிலும் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்து முடங்கியுள்ளது. 10-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தானேவில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக, பல இடங்களில் சிக்கிக் கொண்ட 120 பேரை இந்திய விமானப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். கல்யான் பகுதியில், பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர். ராய்காட் பகுதியில் ஒரு விவசாய பண்ணையில் சிக்கிக் கொண்டவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் அதிகாரிகள் மீட்டனர்.
மாற்றுத்திறன் விலங்குகளுக்கான சரணலாயத்தில் மழையால் சிக்கிக் கொண்ட ராணி என்ற 3/வயது குரங்கை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டு, சிகிச்சை அளித்தனர். இதனிடையே மகாராஷ்டிராவுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொங்கன், கோவா, குஜராத் மாநிலங்களில் மிக தீவிர மழையும், மத்திய மகாராஷ்டிரா, கிழக்கு ராஜஸ்தான் பகுதிகளில் அதிதீவிர கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன மழை எச்சரிக்கை காரணமாக, மும்பை மக்கள் கடற்கரை பக்கம் செல்ல வேண்டாம் என மும்பை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அவசர தேவைக்கு 1916 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.