உத்திரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்ற 16 மாதங்களில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் 16 மாதங்களை கடந்து ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள குடியரசு தினத்தை முன்னிட்டு உத்திரப்பிரதேச அரசு சாதனை பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது. அதில் அரசு செய்த என்கவுன்ட்டரையும் இணைத்துள்ளது. காவல்துறையின் சாதனை பட்டியலில் இந்த என்கவுண்டர் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்ற 16 மாதங்களில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் 78 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 7,043 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11,981 குற்றவாளிகள் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர். 838 குற்றவாளிகள் காயம் அடைந்துள்ளனர். சிறப்பு காவல் படையினரால் 9 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சராசரியாக ஒரு நாளைக்கு 6 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு, 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 4 குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் அடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு குடியரசுத்தினத்துக்கு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி 17 குற்றவாளிகள் கொல்லப்பட்டதாகவும், 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு என்கவுண்ட்டர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.