நாடாளுமன்றம் pt web
இந்தியா

மக்களவையில் ஓங்கி ஒலிக்கும் தமிழ்.. குளிர்கால கூட்டத் தொடரில் 50 தமிழ் உரைகள்

நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் அதிகபட்சமாக 50 உரைகள் தமிழில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.

PT WEB

மக்களவையில் தமிழ் மொழி பெருமையாக ஒலிக்கிறது. குளிர்கால கூட்டத்தில் 50 தமிழ் உரைகள் நிகழ்த்தப்பட்டன. தாய்மொழியில் உரையாற்றும் வசதி, சபாநாயகர் ஓம் பிர்லாவின் முன்னெடுப்பால், உறுப்பினர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மாநில மொழிகளில் உரையாற்றும் வசதி, நாடாளுமன்ற விவாதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.

மக்களவையில் உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழி அல்லது மாநில மொழியில் உரையாற்றுவதும், அதை உடனுக்குடன் நேரலையில் மொழிபெயர்ப்பதும் தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாகியிருக்கிறது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முன்னெடுப்பால், எம்.பி.க்கள் தங்கள் தாய்மொழியில் பேச அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாடாளுமன்றம்

குறிப்பாக, அண்மையில் நடைபெற்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், இந்தி மற்றும் ஆங்கிலம் அல்லாத மாநில மொழிகளில் மொத்தம் 160 உரைகள் நிகழ்த்தப்பட்டன. அதிகபட்சமாக தமிழ் மொழியில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டன. மராத்தியில் 43, மற்றும் வங்காள மொழியில் 25 உரைகள் நிகழ்த்தப்பட்டன. திமுகவின் மூத்த உறுப்பினர் டி.ஆர்.பாலு, 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகத் தமிழில் பேசினார். மேலும் திருமாவளவன், சு.வெங்கடேசன், கனிமொழி, துரை வைகோ, கலாநிதி வீராசாமி போன்ற 37-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அவ்வப்போது தமிழில் உரையாற்றியுள்ளனர்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தமிழில் பதில் அளித்தார். முன்பு ஆங்கிலம் அல்லது இந்தியிலேயே மக்களவையில் உரையாற்ற முடியும். பிற மொழிகளில் பேச விரும்பும் உறுப்பினர்கள் ஒருநாள் முன்கூட்டித் தெரிவிக்க வேண்டும். அதற்கான மொழிபெயர்ப்பாளர்கள் அவையில் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே உறுப்பினர்கள் தங்களது மாநில மொழிகளில் பேச முடியும்.

ஆனால், இப்போது மக்களவையில் தமிழ் உட்பட அரசமைப்பின் எட்டாம் அட்டவணையில் இடம்பெற்ற 22 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசுவதை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி அமலில் உள்ளது. இதன் மூலம், உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழி அல்லது மாநில மொழியில் உரையாற்றும்போது, பிற மாநில உறுப்பினர்கள் அதைத் தங்கள் மொழியில் உடனுக்குடன் கேட்டுப் புரிந்துகொள்ள முடிகிறது. இது நாடாளுமன்ற விவாதங்களில் அனைத்து மாநில மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை உறுதி செய்கிறது. மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் மாநில மொழிகளில் உரையாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.