டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கினால் ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு தரத் தயாராக உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்திய தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை காவல்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் மத்திய அரசின் கைவசம் உள்ளது. தங்களிடம் உள்ள அதிகாரங்கள் மூலம் டெல்லி அரசை மத்திய அரசு கட்டுப்படுத்தவே முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார். அதில் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்பது ஆம் ஆத்மி கட்சியின் பிரதான கோரிக்கையாக உள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி வெளியிட்டு தேர்தல் அறிக்கையிலும் இது இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கத் தயார் என்றால் காங்கிர கட்சிக்கு ஆதரவு தருவதாகவும், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்பதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.