'உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிட தயார்' என மருத்துவர் கஃபீல் கான் தெரிவித்துள்ளார்.
கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் கடந்த 2017ஆம் ஆண்டு 80 குழந்தைகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தனர். ஆக்சிஜன் வினியோகிக்கும் நிறுவனத்திற்கான தொகையை மாநில அரசு தராததால்தான் இந்த அவலம் நேர்ந்ததாக அப்போது பணியில் இருந்த மருத்துவர் கஃபீல்கான் கூறினார். ஆனால், பணியில் அலட்சியமாக இருந்தார் எனக் கூறி மருத்துவர் கஃபீல்கானை உத்தரப்பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்ததுடன் கைதும் செய்தது. ஆனால் இவ்விவகாரத்தில் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக கூறிய கஃபீல்கான் வழக்கும் தொடர்ந்தார்.
தற்போது 5 ஆண்டுகளாக பணியிடை நீக்கத்தில் இருந்து வரும் கஃபீல் கான், கோரக்பூரில் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக போட்டியிட எந்த கட்சி தனக்கு வாய்ப்பளித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.