தர்மேந்திர பிரதான் புதிய தலைமுறை
இந்தியா

“100 முறைகூட மன்னிப்புக் கேட்கத் தயார்; ஆனால் உண்மை..” - தர்மேந்திர பிரதான் மீண்டும் ஆவேசப் பேச்சு

”தமிழ்நாட்டு எம்பிக்கள் யாருடைய மனதும் புண்படும்படிப் பேசி இருந்தால் 100 முறைகூட மன்னிப்பு கேட்க தயார்” என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Prakash J

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்றநிலையில் 2ஆவது அமர்வு, மார்ச் 10ஆம் தேதியான இன்று தொடங்கியது. அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

தர்மேந்திர பிரதான், கனிமொழி

இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மாணவர்களை திமுக தவறாக வழிநடத்துகிறது.

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ - டர்ன் போட்டது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக முதல்வர் முன்வந்தார். ஆனால், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார். சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். சூப்பர் முதல்வர் யார்? யார் அந்த சூப்பர் முதல்வர் என்பது குறித்து திமுக எம்பி. கனிமொழி பதில் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ”தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் . ஜனநாயக விரோதமானவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை” என்ற கருத்தினையும் முன்வைத்தார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் “மத்திய அமைச்சர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்” என கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, ”தான் பேசியிருந்தது புண்படுத்தியிருந்தால் அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இந்தநிலையில், இன்று தேசிய கல்விக் கொள்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதானுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அமளியினர் ஈடுபட்டனர். குறிப்பாக, திருச்சி சிவாவுக்கும் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய தர்மேந்திர பிரதான், "கனிமொழி எனக்கு சகோதரி போன்றவர் தான். தமிழ்நாட்டு எம்பிக்கள் யாருடைய மனதும் புண்படும்படிப் பேசி இருந்தால் 100 முறைகூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும் தமிழகத்துக்கு எதிரானது அல்ல” என்றார். ஆனால் அதன் பிறகு திமுக அரசு மீதும் திமுகவினர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

தர்மேந்திர பிரதான் பேசுகையில், “புதிய தேசியக் கல்விக் கொள்கையில் எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை. மொழிக்கொள்கை குறித்து சந்திரபாபு நாயுடு பேசியதை இங்கே கூற விரும்புகிறேன். ஆந்திராவில் 10 மொழிகளை கற்றுக்கொடுக்க இருப்பதாக அவர் பேசியுள்ளார். திமுக உறுப்பினர்களின் வலியை என்னால் உணர முடிகிறது; இதற்கு முன் அவர்கள் சிலரால் (காங்கிரஸ்) ஏமாற்றப்பட்டுள்ளார்கள். நமது பிரதமர் கூறியதுபோல் தமிழ் மிக மூத்த மொழி என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். புதிய கல்விக் கொள்கையின்படி, தமிழ்நாட்டின் பயிற்றுமொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும் என உள்ளது. இந்தியாவின் வரலாற்றைப் பற்றி பெருமிதம் கொள்ளாதவர்களை நாம் என்ன செய்வது? கடவுளே! அவர்களுக்கு சிந்திக்கும் திறனைக் கொடுங்கள். தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்வி சரிவை சந்தித்து வருகிறது. காலனித்துவ மொழியான ஆங்கிலம் ஆதிக்கம் பெற்று வருகிறது. அதற்கான தரவுகள் என்னிடம் உள்ளன.

சிறுபான்மையின மக்களுக்கான பள்ளிகள் தமிழ்நாட்டில் 1,500 உள்ளன. அவற்றில் 900 பள்ளிகளில் மூன்று மொழிகளில் ஒன்றாக தெலுங்கு மொழி கற்பிக்கப்படுகிறது. உருது 350 பள்ளிகளில் மூன்று மொழிகளில் ஒன்றாக பயிற்றுவிக்கப்படுகிறது. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளும் மூன்று மொழிகளில் ஒன்றாக பயிற்றுவிக்கப்படுகிறது. நாமக்கல்லில் உள்ள ஒரு பெண்ணிடம் நான் பேச நேர்ந்தது; தொழில் தொடங்க ஆர்வமாக உள்ள அந்தப் பெண், தான் இந்தி கற்ற ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்; இதுவே புதிய தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் சிபிஎஸ்சியுடன் இணைந்த 1,460 பள்ளிகள் உள்ளன; அவற்றில் 1,411 பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது, இந்தி 774 பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படுகிறது; இதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதுவே உண்மை; நீங்கள் (திமுக உறுப்பினர்கள்) ஒரு தனி உலகத்தில் வாழலாம்; ஆனால் இதுவே உண்மை. என்னை நீங்கள் முட்டாள் எனக் கூற முடியாது; அதேபோல் நீங்கள் தமிழ் நாடு மக்களை எப்போதும் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது. பழைய எண்ணங்களில் இருந்து வெளியே வாருங்கள்; பழமைவாதிகளாக இருக்காதீர்கள். சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நீங்கள் எப்படி நடத்தினீர்கள் என்பது தெரியும். அதனால் அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்” என்றார்.

இதனையடுத்து, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தமிழ்நாடு அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டதற்கான கடிதம் ஒன்றினையும் பகிர்ந்து தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.