வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி 12ம் வகுப்பு பொருளியல் மறுதேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
டெல்லியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார். “வினாத்தாள் வெளியானதால் 12ம் வகுப்பு பொருளியலுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்புக்கான கணிதத் தேர்வு டெல்லி மற்றும் ஹரியானாவில் மட்டுமே வெளியானது. தேவைப்பட்டால் டெல்லி மற்றும் ஹரியானாவில் மட்டும் மறுதேர்வு நடத்தப்படும். நாடு முழுவதும் தேர்வு நடத்துவதாக இருந்தால், 10ம் வகுப்புக்கு ஜூலை மாதத்தில் மறுத்தேர்வு நடைபெறும். வினாத்தாள் வெளியானது குறித்து தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணைகளின் அடிப்படையில், 10ம் வகுப்பு கணிதத் தேர்வு குறித்து 15 நாட்களில் ஆலோசித்து அறிவிக்கப்படும்” என்று அனில் ஸ்வரூப் தெரிவித்தார்.
வினாத்தாள் வெளியானதை அடுத்து 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணிதத் தேர்வு மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்தது. தேர்வு நடைபெறும் நாள் ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஏப்ரல் 25 ஆம் தேதி 12ம் வகுப்பு பொருளியல் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.