இந்தியா

முதியோருக்காக வீடு தேடி வங்கி சேவை: ரிசர்வ் வங்கி உத்தரவு

முதியோருக்காக வீடு தேடி வங்கி சேவை: ரிசர்வ் வங்கி உத்தரவு

webteam

வங்கிக்கு வரமுடியாமல் சிரமப்படும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நோயாளிகளின் வீட்டுக்கே சென்று தேவையான வங்கி சேவைகளை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

சேமிப்பு கணக்கில் வைப்பு நிதி செலுத்துவது, பணம் எடுப்பது, காசோலை மற்றும் வரைவோலை பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அடிப்படை வங்கி பணிகளை அவர்களுக்காக செய்து தர வேண்டும் என்றும், இதற்காக வங்கி ஊழியர்கள் நேரடியாக வீட்டுக்கே சென்று சேவையாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வசதியை பெறுவதற்காக மூத்த குடிமக்களுக்கான விண்ணப்பங்களை ஆண்டுக்கு ஒருமுறை விநியோகிக்க வேண்டும் என்றும் இந்த வசதி பயனாளிகளுக்கு சென்றுசேரும் வகையில் வங்கிகள் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவுறுத்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வங்கிகளும் கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.