மாதிரிப் படம் எக்ஸ் தளம்
இந்தியா

98.26 சதவீதம் வங்கிக்கு திரும்பிய 2 ஆயிரம் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி தகவல்!

தற்போது புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு குறித்த தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Prakash J

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் அடித்தட்டு மக்கள் பெரும் அவஸ்தையைச் சந்தித்தனர். இதற்கிடையே, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதை மாற்றுவதற்கும் மக்கள் சிரமப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்புடைய ரூ. 2,000 நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் இருந்தன.

மாதிரிப்படம்

2023 அக்டோபர் 7ஆம் தேதிக்குள் வங்கிகள் மூலமாகவோ, ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலோ நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில், பல்வேறு வழிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு குறித்த தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.2,000 நோட்டுகள் 98.26 சதவீதம் திரும்ப பெறப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ’ஜூன் 2, 2025 நிலவரப்படி ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.