இந்தியா

“பணமதிப்பிழப்பு நடவடிக்கை 4 மணி நேரத்திற்கு முன்தான் தெரியும்” - ஆர்பிஐ தகவல்

“பணமதிப்பிழப்பு நடவடிக்கை 4 மணி நேரத்திற்கு முன்தான் தெரியும்” - ஆர்பிஐ தகவல்

webteam

நேற்றுடன் இந்தியாவில் ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 2 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி நவம்பர் 8ஆம் தேதி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது நாட்டில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த அவர் புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் கூறினார்.

அத்துடன் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை டிசம்பர் 30, 2016 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைக்க இயலும். வாரத்திற்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெற இயலும். உடனடியாக பணம் தேவையெனில், 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்து ஒரு ஆளுக்கு 4000 ரூபாய் என்ற வகையில் புதிய நோட்டுகளை வங்கிக் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். நள்ளிரவு முதல் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களும் இயங்காது என பல அதிர்ச்சிக்குரிய அறிவிப்புகளை வெளியிட்டார். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு சில மணி நேரங்களில் பட்டி தொட்டியெங்கும் பரவியது. கிராம மக்கள் முதல் சிட்டியில் இருப்பவர்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஏடிஎம்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். ஆனால் ஏடிஎம்கள் இயங்கவில்லை. எந்த முன் அறிவிப்புமின்றி இந்த அறிவிப்பு வெளியானதால் மக்கள் கைகளில் பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். அடுத்த நாள் தேவைக்கு ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைத்தவர்களெல்லாம் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகினர். வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் இந்தியாவில் உள்ள அனைத்து கறுப்புப் பணமும் ஒழிக்கப்படும், கள்ள நோட்டுகள் புழக்கம் முற்றிலும் தடுக்கப்படும் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பணமதிப்பிழப்பு என்பது இந்திய அளவில் நீண்ட நாட்கள் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயமாக மாறியது. 

இத்தகைய புயலை கிளப்பிய பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ஆர்பிஐ ஆணையம் சில தகவல்களை தெரிவித்துள்ளது. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது தொடர்பாக எங்களுக்கு சுமார் 4 மணி நேரத்திற்கு முன்பு தான் தெரியும். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட தினத்தன்று மாலை 5.30 மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய வங்கிகளின் இயக்குநர்கள் அனைவரும் அதில் பங்கேற்றிருந்தனர். அப்போது இந்தியாவின் உயரிய ரூபாய் நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மத்திய வங்கி இயக்குநர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். 

ஆனால் இந்திய ஜிடிபி-யில் இந்த நடவடிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அப்போது எச்சித்தனர். இருப்பினும் கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதாக மத்திய அரசு விளக்கமளித்தது. அப்போது தெரிவிக்கப்பட்ட தகவலின் படி, சுமார் 400 கோடி கள்ள நோட்டுகள் இருப்பதாக கூறப்பட்டது. அதற்கு இந்திய அளவில் உள்ள பணத்தின் அளவில் 400 கோடி என்பது கணிசமான தொகை அல்ல என வங்கியாளர்கள் தெரிவித்தோம். அத்துடன் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் மருத்துவத்துறைக்கு அவதி ஏற்படும் எனக்கூறினோம்.

ஆனால் கள்ள நோட்டுகள் மட்டுமில்லாமல் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானோர் கறுப்புப் பணத்தை சொத்துக்களாகவும், நகைகளாகவும் தான் வைத்திருப்பார்கள், அவர்கள் குறிப்பிட்ட அளவே பணமாக வைத்திருப்போம் என்று வாதம் செய்தோம். அப்போதைய எங்கள் தரப்பு வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மத்திய அரசு அறிவித்த படியே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் 4 வாரங்களுக்குப் பின்னர் ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட குறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அந்த ஆலோசனையில், மருத்துவத்துறை மற்றும் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது குறித்து விவாதித்தோம். இதுபோன்ற 6 பெரும் குறைகள் அப்போது பேசப்பட்டது. இந்த நடவடிக்கையால் கறுப்புப் பணம் பெருவாரியாக ஒழிந்ததாக தெரியவில்லை, ஏனென்றால் பெரும்பாலான பணம் திரும்பப்பெறுப்பட்டுவிட்டது. இருப்பினும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையை மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. பணமதிப்பிழப்பிற்கு பின்னரே இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது என ஆர்பிஐ விளக்கமளித்துள்ளது.