இந்தியா

ரிசர்வ் வங்கி ஆளுநரின் கருத்தால் எளிய மக்கள் கலக்கம்

சங்கீதா

இந்தியாவின் பொருளாதாரம் மேலும் குறையும், பணவீக்கம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என எளிய மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அத்தியாவசிய மருந்துகள், காய்கறிகள் தொடங்கி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மும்பையில் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை மறு ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ், பொருளாதார வளர்ச்சியில் உக்ரைன் போர் பல புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், உலோகங்களின் விலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தனது கவலையை பதிவு செய்துள்ளார். மேலும், நாட்டின் பணவீக்கம் உயர்ந்து, பொருளாதார வளர்ச்சி கணிக்கப்பட்டதை விட குறையவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியிருப்பது ஏழை, நடுத்தர மக்களை கவலையடையச் செய்துள்ளது.

வங்கி வட்டி விகிதமான ரெப்போவை தொடர்ந்து 4 விழுக்காடாகவே வைத்திருக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் வைப்புக்கான வட்டி விகிதமும் தொடர்ந்து 3.35 விழுக்காடாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது என்ற போதும், பணவீக்க உயர்வு நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களின் விலையிலும் எதிரொலித்து பர்சை பதம் பார்க்கும் அபாயம் உள்ளது.