இந்தியாவில் தற்போது பெருமளவில் பணத் தேவைகள் ஆன்லைன் வாயிலாகப் பெறப்பட்டு வருகிறது. அதாவது, பெரும்பான்மையான மக்கள் பலரும் யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, பெரிய கடைகள் முதல் சாலையோர சிறு கடைகள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ செயலிகள் மூலமாகவே நுகர்வோர்கள் பணம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, இந்தியாவில் யுபிஐ மூலம் நடத்தப்படும் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கநாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி மட்டும் இந்தியாவில் ஒரே நாளில் 70.7 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்ததாக நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் UPI பரிவர்த்தனைகள் 19.47 பில்லியனாக உயர்ந்து சாதனை அளவை எட்டியுள்ளன. மதிப்பின் அடிப்படையில், இது ரூ.25.08 டிரில்லியனாக இருந்தது, இது மே மாதத்தில் பதிவான ரூ.25.14 டிரில்லியனுக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்சமாகும்.
இந்த நிலையில், ”யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் ஒருபோதும் கூறியது கிடையாது” என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்திருப்பது பேசுபொருளாகி இருப்பதுடன், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில், பணவியல் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு யுபிஐ பயன்பாடு தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் ஒருபோதும் கூறியது கிடையாது. இதற்கான கட்டணங்களை யாரேனும் ஒருவர் செலுத்தித்தான் ஆக வேண்டும். இந்த யுபிஐ பரிவர்த்தனை மாடல் அப்படியே நீடித்த நிலைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான செலவை யாரேனும் ஒருவர் ஏற்றுத்தானே ஆகவேண்டும். ஆனால், அதை தனி நபர்கள் செலுத்துகிறார்களா அல்லது ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்த்து செலுத்துகிறார்களா என்பதைத் தாண்டி யாரேனும் ஒருவர் செலவை ஏற்க வேண்டும் என்பதுதான் முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.
யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் ஒருபோதும் கூறியது கிடையாது.சஞ்சய் மல்ஹோத்ரா, ஆர்பிஐ கவர்னர்
சஞ்சய் மல்ஹோத்ராவின் இந்தப் பதில் நீண்டநாளைக்கு யுபிஐ சேவைகள் இலவசமாகவே இருக்காது என்பதையும் அதற்கென ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை நாம் செலுத்தக்கூடிய காலம் விரைவில் வரப்போகிறது என்பதையுமே இது உணர்த்துகிறது.
அதேநேரத்தில், ஐசிஐசிஐ, ஆக்சிஸ், யெஸ் உள்ளிட்ட முக்கிய தனியார் வங்கிகள், UPI கட்டணங்களை கட்டண திரட்டிகளுக்கு (PAs) மாற்றுகின்றன. கட்டண திரட்டிகள், வணிகங்கள் ஆன்லைன் கட்டணங்களை ஏற்க அனுமதிக்கும் ரேஸர்பே , கேஷ்ஃப்ரீ மற்றும் பேயு போன்ற மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் ஆகும்.