இந்தியா

வங்கிகளில் போதிய அளவில் பணம் இருக்க நடவடிக்கை: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி

webteam

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்கி வருகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகபெரிய பொருளாதார சவால். கொரோனாவால் ஏற்றுமதி மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நெல் பயிரிடும் அளவு 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. மார்ச் மாதம் வாகன உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. 2021-22 நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. ஜி-20 நாடுகளிலேயே அதிக வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்ற தன்மையே நீடிக்கிறது. கொரோனாவால் நாட்டில் 25 சதவீதம் மின் தேவை குறைந்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். சிறு குறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆர்பிஐ வங்கிகளுக்கு போதிய ரூபாய் நோட்டுகளை தந்துள்ளது  வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து 60 சதவீதம் வரை மாநில அரசுகள் கடன் பெறலாம்” எனத் தெரிவித்தார்.