இந்தியா

“ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சர்தான் உயரதிகாரி”- அப்போதே கருத்து சொன்ன மன்மோகன் சிங்..!

“ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சர்தான் உயரதிகாரி”- அப்போதே கருத்து சொன்ன மன்மோகன் சிங்..!

Rasus

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மத்திய நிதியமைச்சர்தான் உயரதிகாரி என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2014-ம் ஆண்டு கருத்து தெரிவித்தது தெரியவந்துள்ளது.

நிதி விவகாரத்தில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது. வரும் 19-ஆம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது ராஜினாமாவை அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதுதான் மோதலுக்கு முதல் காரணமாகவும் சொல்லப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு மத்திய நிதியமைச்சகம் நேரடி உத்தரவுகளை பிறப்பித்து வருவதாக காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் , ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மத்திய நிதியமைச்சர்தான் உயரதிகாரி என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2014-ம் ஆண்டு கருத்து தெரிவித்தது தெரியவந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஒருபோதும் மத்திய நிதியமைச்சகத்துக்கு உயரதிகாரியாக இருக்க முடியாது எனக் கூறியுள்ளார். நிதியமைச்சர் கூறினால் அதனை மறுக்காது ரிசர்வ் வங்கி ஆளுநர் பின்பற்றியாக வேண்டும் என்றும் அதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் பேசியுள்ளார். நிதியமைச்சரின் உத்தரவுக்கு கீழ்ப்படியத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் கருதினால், பதவியில் இருந்து விலக அவர் தயாராக வேண்டும் என்றும் மன்மோகன்சிங் பேசியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.