மத்திய அரசுடன் கருத்து மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தன் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பரிசீலிக்க கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் சமீப காலமாக கடுமையான மோதல் போக்குவரத்து நிலவுகிறது. ரிசர்வ் வங்கியின் 11 வங்கிகளுக்கான கடன் விதிகளை எளிதாக்குவதன் மூலம் சிறு குறு நிறுவனங்கள் மீதான அழுத்தம் ஓரளவிற்கு குறையும் என மத்திய அரசு நம்புகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஐஎல்&எஃப்எஸ் தனியார் நிதி நிறுவனம் நிதிச் சிக்கலில் சிக்கியதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டது. இதன் காரணமாக வங்கி சாராத அரசுக்கு ஆதரவான சில நிதி நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பணத்தை பெற முடியாமல் கடுமையான பணப்புழக்கத்தில் தவித்து வருகிறது. இதுதவிர வாராக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி எடுத்த சில நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அதிருப்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனிடையே தன்னாட்சி அமைப்பான ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அடிக்கடி ஆலோசனைகளை வழங்கி அதன்படி செயல்படுமாறு நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் நெருக்கடிக்கு பணியாத ரிசர்வ் வங்கி மத்திய அரசை பல வகையில் சாடி வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடைபெற் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த முயல்வதாக தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் இதை செய்ய தவறினால் மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் பகிரங்கமாக தெரிவித்தார்.
ஆனால் இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இந்திய அரசின் பொருளாதாரம் தொடர்ந்து சரிய ரிசர்வ் வங்கி தான் காரணம் என தெரிவித்தார். வங்கிகள் அளித்த கண்மூடித்தனமான கடன்களை ரிசர்வ் வங்கி கண்டுகொள்ளவில்லை என்றும் சாடினார். சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு பின்னால் 2008-ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை வங்கிகள் எந்த அடிப்படையும் இல்லாமல் கண்மூடித்தனமாக கடன்கள் வழங்கியுள்ளன என்ற அவர் இப்படி கடன் வழங்கிய போது ரிசர்வ் வங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது எனவும் கூறினார்.
இப்படி தொடர்ச்சியாகவே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தன்னாட்சி அமைப்பாகவே இருந்தாலும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கருதுகிறது. ரிசர்வ் வங்கியின் சட்டப்பிரிவு 7-ன் படி பொதுமக்கள் நலன் கருதி ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி அறிவுறைகள் வழங்க அதிகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இந்த அதிகாரம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை. மிகவும் இக்கட்டான சூழ்நிலையை இந்தியா எதிர்கொண்ட 1991 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் கூட மத்திய அரசு இந்த அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. அதேசமயம் தன்னிச்சை அமைப்பான ரிசர்வ் வங்கியை பல வழிகளில் கட்டுப்படுத்த முயற்சி செய்ய காரணம் என்ன என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. பிரிவு 7-ஐ பயன்படுத்துவது ரிசர்வ் வங்கிக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் எனவும் வங்கியாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவும் என்றும் சொல்லப்படுகிறது.
மத்திய அரசுடன் கருத்து மோதல்கள் அதிகரித்து வரும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தன் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பரிசீலிக்க கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இத்தகவல் குறித்து ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.