RBI pt desk
இந்தியா

ஒழுங்குமுறை செயல்பாட்டில் குறைபாடு | 5 வங்கிகளுக்கு அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி!

ஒழுங்குமுறை செயல்பாடுகளில் இருந்த குறைபாடுகள் காரணமாக ஐசிஐசிஐ, பாங்க் ஆஃப் பரோடா, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட 5 வங்கிகளூக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

Prakash J

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் NBFCகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒழுங்குபடுத்துகிறது. மேலும், அவ்வங்கிகள் விதிகளை மீறுதல் அல்லது வாடிக்கையாளர் நலன்களை மீறுதல் ஆகியவற்றிலும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில், ஒருசில வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வங்கிகளில் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு, உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) மற்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு - வழங்கல் மற்றும் நடத்தை ஆகியவற்றில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பிறப்பித்த சில உத்தரவுகளை பின்பற்றாததற்காக ICICI வங்கிக்கு ரூ.97.80 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

அதேபோல், வங்கிகள் வழங்கும் நிதி சேவைகள் மற்றும் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை குறித்த சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக பேங்க் ஆஃப் பரோடாவிற்கு ரூ.61.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கிசான் கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி மானியத் திட்டம் குறித்த சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக ஐடிபிஐ வங்கி லிமிடெட் மீது ரூ.31.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, KYC தொடர்பான சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக மகாராஷ்டிரா வங்கிக்கு ரூ.31.80 லட்சமும், உள்/அலுவலகக் கணக்குகளின் அங்கீகரிக்கப்படாத செயல்பாடு குறித்த சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக ஆக்சிஸ் வங்கிக்கும் ரூ.29.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.