இந்தியா

“பாகிஸ்தானை மட்டுமே நம்புவாரா ராகுல்?” - ரவிசங்கர் பிரசாத் கேள்வி

webteam

ரஃபேல் போர் விமான கொள்முதலில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியிருக்கும் நிலையில், அவர் தொடர்ந்து பொய்யான தகவலை நாட்டு மக்களுக்கு அளித்து வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,‌ ரஃபேல் ஒப்பந்த முறைகேட்டை மறைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஆதாயம் பெற்றுத்தரும் வகையில் பிரதமர் அலுவலகம் பிரான்ஸ் அரசுடன் இணை பேச்சுவார்த்தை ந‌டத்தியதாக பாதுகாப்புத் துறை ஆவணங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக ராகுல் தெரிவித்தார்.

ரஃபேல் போர் விமான கொள்முதலில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இதுதொடர்பாக பிரதமர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து ஏன் விசாரணை நடத்தக்கூடாது? எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில், ராகுல்காந்தி தொடர்ந்து பொய்யான தகவலை நாட்டு மக்களுக்கு அளித்து வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்திய விமானப்படை, உச்ச நீதிமன்றம், மத்திய கணக்கு தணிக்கை என எந்தவொரு அமைப்பையும் நம்பாத ராகுல், பாகிஸ்தானை மட்டுமே நம்புகிறாரோ? என எண்ணத் தோன்றுகிறது எனக் கூறினார்.