இந்தியா

ரேஷன் சர்க்கரைக்கு மானியம் ரத்து..!

Rasus

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தின்படி, ரேஷன் கடைகளில் சர்க்கரை ஒரு கிலோ 13 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தை விலையைப் பொறுத்து, ஒரு கிலோவுக்கு 18 ரூபாய் 50 காசை மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. இந்நிலையில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மானியங்களை குறைத்து வரும் மத்திய அரசு, ஏற்கனவே ரேஷன் அரிசி, கோதுமைக்கான மாநில அரசின் கொள்முதல் விலையை அண்மையில் அதிகரித்தது. எனினும், இந்த நிதிச் சுமையை தமிழக அரசே ஏற்பதாக அறிவித்து, ரேஷனில் அரிசி இலவசமாகவும், கோதுமை விலையை உயர்த்தாமலும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ரேஷன் சர்க்கரைக்கான மானியத்தையும் வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரத்து செய்வதாக மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இதையடுத்து, ரேஷன் சர்க்கரை விலையைவிட 100 சதவிகிதத்துக்கு மேலான மானியம் ரத்தாவதால் ஏற்படும் நிதிச் சுமையை தமிழக அரசு ஏற்குமா அல்லது ரேஷனில் சர்க்கரை விலையை உயர்த்துமா என்பது அடுத்த மாத இறுதிக்குள் தெரிய வரும்.