சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, பொதுமக்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச்சென்றனர்.
நாகலாந்து மாநிலத்தின் லாங்லெங்க் மாவட்டத்தில் தனது வீட்டிற்கு அருகாமையில் இருந்த நபரின் வீட்டிற்கு டிவி பார்க்க செல்வதை ஒரு சிறுமி வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இவ்வாறு ஒருமுறை சென்ற சிறுமியை, அந்த வீட்டில் இருந்த நபர் சிறுமியின் அண்ணன் அழைத்துவரச் சொன்னதாக பொய் கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அழைத்துச்சென்று இரக்கமின்றி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் குடும்பத்தாருக்கு தெரியவர, அவர்கள் தங்கள் உறவினர்களிடம் நடந்ததை கூறியுள்ளனர். அவர்கள் மூலம் இந்த சம்பவம் லாங்லெங்க் மாவட்டத்தின் மகளிர் நல அமைப்புகளுக்கு தெரியவர, கடந்த 29ஆம் தேதி சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞரை அவர்கள் பிடித்தனர்.
பிடித்தவுடன் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கிய அவர்கள், கொடூரனின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச்சென்றனர். பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அந்த நபர் பெயர் 29 வயது கொண்ட தினக்கூலி ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.
இதேபோன்று கடந்த மே 31ஆம் தேதி நாகலாந்தின், மான் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பிடித்து அடித்த மக்கள். அந்த நபரை நிர்வாணமாக கட்டி வைத்து, அவரது கழுத்தில் “நான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தேன்” என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகையை கட்டி தொங்கவிட்டிருந்தனர். அத்துடன் அந்த நபரை ஊர்வலமாக இழுத்துச்சென்றும் தாக்கினர். கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் இங்கியோங் நகரத்தில் இரண்டு இளைஞர்களை, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மக்கள் நிர்வாணமாக கட்டி ஊர்வலமாக இழுத்துச்சென்ற தாக்கினர். இந்த நிலையில் நாகலாந்தில் இந்த இரண்டு சம்பவங்கள் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.