இந்தியா

வழக்கை வாபஸ் பெற மறுத்ததால் இளம்பெண் சுட்டுக் கொலை

Rasus

வழக்கை வாபஸ் பெற மறுப்பு தெரிவித்த காரணத்தினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள நைட் கிளப் ஒன்றில் டான்சராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே சந்தீப் குமார் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கடந்த 2017-ஆம் ஆண்டு சுதா அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப் குமார் பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதனிடையே இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வர இருந்திருக்கிறது. இதற்கு முன்னதாக சுதாவின் வீட்டிற்கு வந்த சந்தீப் குமார், ஒருசில நிமிடங்கள் உன்னுடன் பேச வேண்டும் என அழைத்திருக்கிறார். பின்னர் கட்டாயப்படுத்தி சுதாவை காரில் அழைத்துச் சென்றுள்ளார். ஒருசில மணி நேரங்களில் சுதாவின் தாயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்தீப் குமார், வழக்கை வாபஸ் பெற்றுவிட சொல்லுங்கள். இல்லையென்றால் சுதாவை கொன்றுவிடுவேன் என மிரட்டியிருக்கிறார்.

இது நடந்து சில மணி நேரங்களில் குர்கான்- ஃபரிதாபாத் சாலையில் பெண் உடல் ஒன்று சடலமாக கிடப்பது குறித்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்த பார்த்தபோது, அது சுதாவின் உடல் என அடையாம் தெரியவந்திருக்கிறது. வழக்கை வாபஸ் பெற மறுப்பு தெரிவித்த காரணத்தினால் சுதாவை சந்தீப் குமார் 4 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதனிடையே சந்தீப் குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.