இந்தியா

”2014க்கு முன் ஒப்பிடும்போது கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறைவு”-மத்திய அரசு

PT

2014-க்கு முன்பான காலத்தை ஒப்பிடும் போது கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை வழக்கு எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பல தகவல்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது. அது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.. 

கொலை, கொள்ளை வழக்குகள்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில், நாட்டின் குற்ற எண்ணிக்கை தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் நித்தியானந்தா ராய், தேசிய குற்ற ஆவண காப்பகம் வழங்கியுள்ள புள்ளி விவரங்களின்படி, 2006-ம் ஆண்டில் 32,481 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2014 வரை 33 ஆயிரம் என்ற அதே நிலையில் நீடித்துள்ளது.

ஆனால், 2014-ம் ஆண்டுக்கு பிறகு கொலை வழக்குகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 2021-ம் ஆண்டில் 29,272 ஆக குறைந்துள்ளது. மற்றும் 2006-ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்கு எண்ணிக்கை 19,348 ஆக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் 36,735 வழக்குகளாக உயர்ந்துள்ளது. ஆனால், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு வழக்கின் எண்ணிக்கை குறைந்து 2021-ம் ஆண்டில் 31,677 ஆக குறைந்துள்ளது. மேலும், கொள்ளை வழக்குகள் எண்ணிக்கை 2006-ம் ஆண்டில் 18,456 ஆக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் 38,071 ஆக இருந்ததாகவும், ஆனால் அதன் பின்பு அவற்றின் எண்ணிக்கை குறைந்து 2021-ம் ஆண்டில் 29,224 ஆள குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பால் உற்பத்தி 51% அதிகரிப்பு!

இதேபோல், 2014-2022 வரை இந்தியாவில் பால் உற்பத்தி 51% அதிகரித்து உள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா, உலக பால் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக உருவாகிய உள்ளதா? என நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் மக்களவையில், உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா, உலக அளவில் பால் உற்பத்தியில் முன்னணி நாடாக இந்தியா இருந்து வருவதாகவும், கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடப்பு நிதியாண்டு வரை 51% பால் உற்பத்தி இந்தியாவில் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் உலகளாவிய மொத்த பால் உற்பத்தி அளவு 800.33 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், அதில் இந்தியாவின் பங்கு 18.28 சதவீதம், அதாவது 146.31 மில்லியன் டன் ஆகும். ஆனால் 2021-22ம் நிதி ஆண்டில் உலகளாவிய மொத்த பால் உற்பத்தி 918.16 மில்லியன் டன் என்ற நிலையில், அதில் இந்தியாவின் பங்கு 24.08 சதவீதமாகும். அதாவது உலகளாவிய மொத்த பால் உற்பத்தியில் 221.06 மில்லியன் டன் பால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கான காப்பீடு திட்டம்

மேலும், மீனவர்களுக்கான காப்பீடு திட்டத்தில் அதிகம் பயன்பெற்ற மாநிலம் தமிழ்நாடு என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் பரிசோத்தம் ரூபாலா, மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் "பிரதம மந்திரி மட்சய சம்பட யோஜனா" திட்டத்தின் கீழ் 2020-21ம் நிதி ஆண்டு முதல் காப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மீனவர்கள் உயிரிழந்தால் 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தால் ரூ. 2.5 லட்சம் மற்றும் லேசான காயம் எனில் மருத்துவ தேவைக்காக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 682 மீனவர்கள் பயனடைந்துள்ள நிலையில், இதில் தமிழகத்தில் மட்டும் 420 மீனவர்கள் எனவும், இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பயனடைந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் என மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.