இந்தியா

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பிராங்கோவுக்கு மலர் தூவி வரவேற்பு !

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கல் என்பவர் பிஷப்பாக இருக்கிறார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. 

இந்நிலையில், பாலியல் புகாருக்குள்ளான பேராயர் பிராங்கோ பொறுப்பிலிருந்து வாடிகன் நிர்வாகத்தால் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக தன்னை ஜலந்தர் பேராயர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க வலியுறுத்தி வாடிகன் நிர்வாகத்திற்கு பிராங்கோ கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் இந்த வழக்கை சந்திக்க நேரம் செலவிட வேண்டியுள்ளதால் தம்மை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். 

இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் ஃபிராங்கோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு கேரள மாநிலத்தில் பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இதன் பின்பு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீன் பெற்று, பஞ்சாப் சென்றுள்ளார் பிராங்கோ. இந்நிலையில், ஜலந்தரில் அவருக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டது. பூக்கள் தூவி, உற்சாகத்துடன் அவரது ஆதரவாளர்கள் பிராங்கோ முலக்கல்லை வரவேற்றனர். மேலும் அவருக்கு கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தது.

பிராங்கோ முலக்கல்லுக்கு கொடுத்த வரவேற்பு மிகவும் அவமானகரமானது, என பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி லூசியின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வரவேற்பை ஏற்ற பிராங்கோ முல்லக்கல் தனக்குதானே அவமானப்படுத்திக் கொண்டார் என்றும் கூறியுள்ளார்.