இந்தியா

ரஞ்சன் கோகாய் வீட்டில் புகுந்த வெள்ள நீர் -அடைமழையில் அசாம்!

jagadeesh

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இல்லத்திற்குள் மழை நீர் புகுந்தது.

நீதித்துறையிலிருந்து நேரடி அரசியலுக்குள் நுழைந்துள்ள ரஞ்சன் கோகாய்,‌ அசாம் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட‌வர். 1978 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய அவர், கவுகாத்தி உ‌‌யர்நீதிமன்ற நிரந்தர நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை‌‌ நீதிபதி என படிப்படியாக வளர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியானார்.

கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற அவருக்கு தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அசாமில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டு ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதற்கு ரஞ்சன் கோகாய் வீடும் தப்பவில்லை. திப்ரூகார்க் நகரில் உள்ள பல வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்ததால், சுமார் 25 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த மழைநீரானது உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்யின் வீட்டிற்குள் புகுந்தது. இல்லத்திலிருந்த கோகாய்யின் வயதான தாயார் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக திப்ரூகார்க் மாவட்ட துணை காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.