கேரளாவில் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு சர்ச்சையும் வெடித்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சர்ச்சைக்குரியதாய் மாறியிருக்கிறது. கேரள சுங்கத்துறை அதிகாரி பதவிக்காக கேரள அரசுபணியாளர் தேர்வணையம் நடத்திய தேர்வு பட்டியலை ரத்து செய்ததால்தான் ரேங்க் பட்டியலில் 76வது இடம் பிடித்திருந்த இந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் மற்றும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
இளைஞர் இறப்பிற்கு கேரள அரசு பொறுப்பேற்க வேண்டும் என இளைஞர் காங்கிரஸார் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் தவறான நடவடிக்கைக்கு அனுவின் மரணம் சாட்சியாய் அமைந்துவிட்டது என எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காரகோணம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் என்பவரது மகன் அனு (28). பட்டதாரியான இவர் தனது அறையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனு எழுதியுள்ள ஐந்து வரி கடிதத்தில், “சில நாட்களாக உணவு வேண்டாம் என தோன்றுகிறது. உடம்பெல்லாம் வலிக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. சில நாட்களாகவே எல்லோரிடமும் வேண்டுமென்றே சிரித்துபேசி நடிக்க முடியவில்லை. எல்லாவற்றிக்கும் காரணம் வேலையின்மைதான். மன்னிக்கவும்,” என அனு இறப்பதற்கு முன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பட்டதாரியான அனு, 2018ம் ஆண்டு போலீஸ் வேலைக்காக தேர்வு எழுதியுள்ளார். அதில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் உடற்சீராய்வு தேர்வில் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது.. இதையடுத்து கேரள அரசுபணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட கேரள சுங்கத்துறை அதிகாரிக்கான தேர்வெழுதி அதில் 76வது இடம் பிடித்தார்.
இதையடுத்து வேலை கிடைத்துவிடும் என உறுதியுடன் இருந்த அனுவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரசு சார்பில் 68 ரேங்க் வரை மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதையடுத்து கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு ரேங்க் பட்டியல் காலாவதியை ஜூலை 20ம் தேதி வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டிருந்தது. அப்போதும் அனு, வேலை கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்த நிலையில், ரேங்க் பட்டியலை அரசு ரத்து செய்ததாகவும், இதனால் மனமுடைந்து காணப்பட்ட அனு, தற்கொலை செய்து கொண்டதாக அனுவின் தந்தை சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
இளைஞரின் தற்கொலைக்கு அரசு தேர்வாணைய ரேங்க் பட்டியலை ரத்துசெய்ததே காரணம் எனவும், அனு இறப்பிற்கு கேரள அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறி இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிகழ்விடம் சென்று அனுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சட்டசபை எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, “அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு அனுவின் மரணம் சாட்சியாய் அமைந்துவிட்டதாக,” தெரிவித்துள்ளார்.