கிரிக்கெட் உள்ளிட்ட சர்வதேச அளவிலான விளையாட்டுகளில் இந்தியா சிறந்து விளங்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, "நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழத்தி இந்தியா வென்றது. ஆனால் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா வெற்றிவாய்ப்பை இழந்தது. இதில் மேட்ச் பிக்சிங் நடந்திருக்குமோ எனும் சந்தேகம் வலுக்கிறது. பி.சி.சி.ஐ இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், "கிரிக்கெட் உள்ளிட்ட சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சிறந்து விளங்கவேண்டுமென்றால், இத்தகைய போட்டிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதன்மூலம், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரமும், அணிகளில் பன்முகத்தன்மையும், செயல்திறனும் உயரும்" என்று அத்வாலே கூறினார்.
ஜி.எஸ்.டி குறித்து கருத்து கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அத்வாலே, “எளிய மக்களிடம் ஜி.எஸ்.டி பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்துவதுடன், பாபாசாஹேப் அம்பேத்கரின் கனவான சமூக சமத்துவத்திற்கும் வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.