Ramashish Rai Ramashish Rai facebook
இந்தியா

பாஜக மீது விமர்சனம்.. பதவியிலிருந்து விலகிய தலைவர்.. உ.பி. தேர்தலில் RLD-க்கு பின்னடைவு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

Prakash J

ராஷ்டிரிய லோக்தளம் (RLD) கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவராக இருந்த ராமசீஷ் ராய் (Ramashish Rai), தனது மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். RLD கட்சி சமீபத்தில் அனுபம் மிஸ்ரா என்பவரை மாநிலச் செயல் தலைவராக நியமித்து மாநில அளவில் கட்சி அமைப்புகளை மாற்றியமைத்தது. இதனால் ராமசீஷ் ராயின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறைக்கப்பட்டதும் இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. பதவியிலிருந்து விலகிய அவர், நாட்டில் அரசியலமைப்பு நிறுவனங்கள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Ramashish Rai

அரசியலில் பணபலம் ஆதிக்கம் செலுத்துவதாகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகச் சமுதாயத்தைச் சாதி மற்றும் மதரீதியாகப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) RLD அங்கம் வகிக்கும் சூழலில், வேலைவாய்ப்பு, மாணவர் போராட்டங்கள் மற்றும் விவசாயிகள் சார்ந்த முக்கியக் கோரிக்கைகளில் கட்சி குரல்கொடுக்காமல் மௌனமாக இருப்பது வேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிளவுபடுத்தும் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜெயந்த் சௌத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக்தளம் கட்சிக்கு, ராமசீஷ் ராயின் பதவி விலகல் பெரும் அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Ramashish Rai

அதேநேரத்தில், தற்போதைக்கு வேறு எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும், ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையை அறிவிக்கவுள்ளதாகவும் ராமசீஷ் ராய் தெரிவித்துள்ளார். 1975-இல் ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கத்தின் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ராமசீஷ் ராய், மே 2022-இல் RLD மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.