அயோத்தி
அயோத்தி pt web
இந்தியா

அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ராமர் ஆலய விழா அழைப்பு

PT WEB

செய்தியாளர் - கணபதி சுப்ரமணியம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதில் கலந்துகொள்ள அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் என பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களும் பெருமளவில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அயோத்தி ராமர் ஆலய வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் ‘ராமர் ஆலய சிறப்பு தொடக்க விழா’ நிகழ்ச்சிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ரஞ்சன் கோகோய் தலைமையில் செயல்பட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமர்வில் நீதிபதியாக இருந்த பாப்டே பின்னர் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, பின்னர் ஓய்வு பெற்றார்.

2019 ஆம் வருடம் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் நீதிபதியாக இருந்த சந்திரசுட் தற்போது தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருகிறார்.

தலைமை நீதிபதி சந்திரசூட்

2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் விவரம் பின்வருமாறு : --

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனஞ்செய் சந்திரசுட்

முன்னாள் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நாசிர்

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன்

அந்த தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் ஆலயம் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. ராமர் ஆலயம் நிர்மாணிக்க அனுமதி அளித்த தீர்ப்பில், இஸ்லாமியர்களுக்கு புதிய மசூதி உருவாக்க ஐந்து ஏக்கர் நிலம் அளிக்கவும் உத்தரவு அளிக்கப்பட்டது.