பாலியல் வன்முறை வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள குர்மீத் சிங், சிறையில் கண்ணீர்விட்டபடி தூங்காமல் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், தனது ஆசிரமத்தில் உள்ள பெண்கள் இருவரை, பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. 14 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் குர்மீத் ராம் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள் வீதம், 20 வருட தண்டனையும், பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார். தீர்ப்பைக் கேட்டு கண்ணீர்விட்ட குர்மீத், அழுதபடியே சிறைக்கு சென்றார்.
அவருக்கு, கைதி எண்.1997 என்று எழுதப்பட்டு இருந்த கைதி உடை வழங்கப்பட்டது. அதை அணிந்து கொண்டார். அவருக்கு, சிறையில் எந்த சிறப்பு வசதியும் செய்துதரப்படவில்லை.
நேற்று முதல் நாள் இரவு முழுவதும் தூங்காமல் கண்ணீர் விட்டு அழுதபடியே இருந்தார். அவருக்கு திரவ உணவு வழங்கப்படுகிறது. இடையில் தண்ணீர் அல்லது பால் வழங்கப்படுகிறது. மற்ற கைதிகள் யாரிடமும் பேசாமல் இருக்கிறார் என்று சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் தெரிவித்தனர்.