Ram Nath Kovind x page
இந்தியா

”மக்களைப் பெரிதும் பாதிக்கும் மனநலப் பிரச்னைகள்” - கவலை தெரிவித்த ராம்நாத் கோவிந்த்!

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் மாணவர் தற்கொலைகள் அறுபத்தி ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்தார்.

Prakash J

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65 சதவீதம் அதிகரித்துள்ளதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்தார்.

தற்கொலை தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் அரசு சாரா அமைப்பான 'சினேகா', 2026-இல் தனது 40 ஆண்டுச் சேவைகளை நிறைவு செய்துள்ளது. இதனை நினைவுகூரும் வகையில், 'தற்கொலை தடுப்பு, மனநல விழிப்புணர்வு மற்றும் கருணையுடனான பராமரிப்பு' என்ற தலைப்பில் தேசிய மாநாட்டை சென்னை நுக்கம்பாக்கத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. இந்திய மனநல மருத்துவச் சங்கம், சர்வதேச தற்கொலை தடுப்புச் சங்கம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த மாநாட்டை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் சினேகா அமைப்பின் தலைவரும், தொழில் அதிபருமான நல்லி குப்புசாமி வரவேற்புரையாற்றினார். விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

Ram Nath Kovind

விழாவில் பேசிய அவர், ”தற்கொலை இந்தியாவில் இன்னும் மிகப்பெரிய தடுப்பதற்குட்பட்ட பொது சுகாதார பிரச்னையாக உள்ளது. தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் 2023 தரவுகளின்படி, 1,71,000-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் பதிவாகியுள்ளன. கல்வி அழுத்தம் மற்றும் தேர்வு மன அழுத்தம் காரணமாக மாணவர்களில் தற்கொலை அதிகரித்துள்ளது. 2013 முதல் 2023 வரை மாணவர் தற்கொலைகள் 65% அதிகரித்து, 2023ஆம் ஆண்டு மட்டும் 13,892 வழக்குகள் பதிவாகியுள்ளன” என்றார்.

தொடர்ந்து அவர், “வாழ்க்கை பற்றிய அச்சங்களும் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் காரணமாக பல இளம் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்ற தொழில்முறை நபர்களும் கடுமையான போட்டி, சோர்வு மற்றும் இடையறாத அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்கள், குறிப்பாக இல்லத்தரசிகள், குடும்ப வன்முறை, சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் பாலின சமத்துவமின்மை காரணமாக அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர். முதியவர்கள் தனிமை மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் துன்புறுகின்றனர். விவசாயிகள் பொருளாதார நெருக்கடிகளால் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். அகதிகள் மற்றும் சிறைக்கைதிகள் COVID-19 பின்னணியின் விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

Ram Nath Kovind

இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. இவை இழந்த உயிர்கள், சிதைந்த குடும்பங்கள், பயன்படுத்தப்படாத திறமைகள். சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் தற்கொலை அதிகமாக இருந்தது. அரசு மற்றும் சமூகம் இணைந்து நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் அதில் மாற்றம் ஏற்பட்டது. இதனால், ஒன்றிணைந்து செயல்பட்டால் கடினமான சவால்களையும் கடக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. மனநல பிரச்னைகள் பெருமளவு மக்களைப் பாதிக்கின்றன. ஆனால் அவமானம் உதவி தேடுவதில் தடையாகஉள்ளது. இது சுகாதார சவாலாக மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின்21வது கட்டுரையில் உறுதி செய்யப்பட்டஉயிர் வாழும் உரிமையுடன் தொடர்புடைய தேசிய அவசியம். ஆகவே, தற்கொலைத் தடுப்பு இந்தியாவின் தேசிய முன்னுரிமையாகஇருக்க வேண்டும்” என்றார்.