இந்தியா

ராம் ஜெத்மலானி மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி இரங்கல்

ராம் ஜெத்மலானி மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி இரங்கல்

webteam

மறைந்த மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி இன்று காலை உடல்நலக்குறைவால் தனது 95 வது வயதில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேசம் ஒரு சிறந்த சட்ட நிபுணரை இழந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அவரது மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், ’’தன் மனதில் பட்டதை பயமின்றி தைரியமாகப் பேசும் சிறந்த பண்பு, ஜெத்மலானியிடம் இருந்தது. அவசர நிலை காலத்தில் மக்களின் சுதந்திரத்துக்கான அவரது துணிச்சலும் போராட்டமும் என்றும் நினைவில் கொள்ளப்படும்.

அவருடன் கலந்து ரையாட எனக்கு கிடைத்த வாய்ப்புகளை அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன். இந்த துயரமான தருணத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.