அயோத்தியில் இங்குதான் ராமர் கோயில் அமைக்கப்பட உள்ளது என கூகுள் மேப்பில் குறிப்பிட்ட இடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ராமர் பிறந்த மண்ணான அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில் கூகுள் மேப்பில் அயோத்தியில் இங்குதான் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது என்று ஒரு இடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்ததுதான் கூகுள் மேப். அதில் ராமஜென்ம பூமி என்று தேடினால் ஒரு குறிப்பிட்ட இடம் காட்டப்படுகிறது. அத்துடன் ஹிந்தியில் ‘மந்திரி யாஹி பனேஹா’ எனக் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் ‘இங்குதான் கோயில் அமைக்கப்பட உள்ளது’ என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை சிலர் ஒரு கோஷமாக கூகுளில் முன் வைத்து வருகின்றனர். ‘ராம ஜென்ம பூமி’ என கூகுள் மேப்பில் தேடினால் இந்த இடம்தான் வெளிப்படுகிறது. இந்த இடத்திற்கு மிக அருகாமையில்தான் 1992 ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி இடிக்கப்பட்ட பாபர் மசூதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கூகுள் மேப் குறிக்கும் அம்புக்குறி கூட ‘இந்துத்துவ’ குறியீடாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே இந்தப் பிரச்னை மேலும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
ராமர் கோயில் தொடர்பான சர்ச்சை இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள போது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் அருகே அந்த இடம் காண்பிக்கப்படுவதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதனிடையே கூகுள் நிறுவனம் இதுகுறித்து கூறும்போது, “பயனாளர்கள் கூகுள் மேப்பில் பெயர், முகவரி, இடங்களை மாற்றம் செய்யும் வசதி உள்ளது. அதன்படி மாற்றப்பட்டிருக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விவகாரம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டப்பட்ட இடம் கூகுள் மேப்பில் இருந்து நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.