ஆந்திராவில் ராமர் சிலை உடைப்பு விவகாரம், அரசியல் ரீதியில் புயலைக் கிளப்பி வருகிறது. அந்த மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள ராமதீர்த்தம் ராமர் கோயில்தான் இப்போது அரசியல் கட்சிகளின் 'ஸ்பாட் லைட்'.
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் ராமதீர்த்தம் என்ற கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோதண்டராமர் கோயில் உள்ளது. சமீபத்தில் இந்தக் கோயிலில் உள்ள ராமர் சிலையை சுக்கு நூறாக உடைத்த மர்ம நபர்கள் சிலர், உடைந்த தலை, உடல் பாகங்களை அருகில் உள்ள குளத்தில் வீசிவிட்டுச் சென்றனர்.
ஆந்திராவில் இப்படி கோயில் சிலைகளை உடைக்கும் சம்பவம் முதல்முறை கிடையாது. கடந்த ஒரு மாதமாகவே கோயில் சிலை உடைப்பு என்பது தொடர் கதையாகி இருக்கிறது. கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதி பகுதியில் பழங்கால தேர் இரவோடு இரவாக கொளுத்தப்பட்ட விவகாரம், இந்தச் சிலை உடைப்பு விவகாரங்களுக்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது.
இதன்பின் மேற்கு கோதாவரி, கர்னூல், அனந்தபூர், கடப்பா, குண்டூர், விஜயவாடா என ஆந்திராவின் முக்கிய நகரங்களில், கிராமங்களில் உள்ள முக்கிய கோயில்களில் இந்து சிலைகள் குறிவைத்து உடைக்கப்பட்டு வந்தன. நேற்றுமுன்தினம் கூட டெக்கலி என்ற பகுதியில் உள்ள புத்தர் சிலை உடைக்கப்பட்டது. சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக புகார்கள் கொடுக்கப்பட்டும், ஆளும் ஜெகன் அரசு சில நாள்கள் முன்பு வரை இந்த விவகாரத்தில் பாராமுகமாகவே இருந்துவந்தது.
ஆனால், ராமதீர்த்தம் ராமர் சிலை உடைப்பு சம்பவம் அதனை மாற்றி அமைத்ததோடு, ஆந்திர அரசியலை ராமரை சுற்றி நகர வைத்தது. ராமர் சிலையை உடைத்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆந்திர மாநில பாஜக முதலில் ராமதீர்த்ததில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியது. பாஜகவுடன் இணைந்து நடிகர் பவன் கல்யாண் குரல் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு களத்தில் குதித்தார். ராமதீர்த்தம் கோயிலை பார்வையிட போவதாக அறிவித்தார் சந்திரபாபு நாயுடு. இதுவரை இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாத முதல்வர் ஜெகன் மோகனும், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸும் திடீரென இதில் தீவிரம் காட்டினர்.
``ஆந்திராவில் இந்து சிலைகளை சேதப்படுத்தும் மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறி, போலீஸுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார் ஜெகன். மறுநாள் அமராவதியில் இருந்து சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினம் வருவதற்குள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ராமதீர்த்தம் சென்றார். ஆனால், அவரை மக்கள் விடவில்லை. இத்தனை நாள்கள் கண்டுகொள்ளாத எம்.பியின் திடீர் அக்கறைக்கு அவரின் கார் மீது கற்களையும் காலணிகளையும் வீசி எதிர்ப்பு தெரிவித்தனர் மக்கள்.
மக்கள் எதிர்ப்பை, ``சந்திரபாபு நாயுடு செய்யும் சதிச்செயல்கள்தான் இது. அவர் ஆட்களை வைத்து கோயில் சிலைகளை உடைத்துவிட்டு தற்போது பழியை ஜெகன் மீது போடுகிறார்" என்று தெலுங்கு தேசம் பக்கம் திசைதிருப்பிவிட்டார் எம்.பி. விஜய்சாய். மறுநாள் ராமதீர்த்தம் வந்த ஆளும் கட்சி அமைச்சர்கள் இருவர் ``விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள். ஒருவேளை இது தெலுங்கு தேசத்தின் செயலாக இருந்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும்" என்று தங்கள் பங்குக்கும் தெலுங்கு தேசம் கட்சியை குற்றம்சாட்டி சென்றனர்.
ஆனால் திட்டமிட்டபடி, சந்திரபாபு நாயுடு கோயிலை பார்வையிட்டுச் சென்றார். இவரைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் சோம்ராஜு மற்றும் ஜனசேனா கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ராமதீர்த்தம் சென்றார். ஆனால், அவர்கள் கூண்டாக கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணும் ராமதீர்த்தம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி ராமதீர்த்தம் பகுதி தற்போது அரசியல் தலைவர்கள் முகாமிடும் அரசியல் மையமாகிவிட்டது.
கோயிலுக்கு வருபவர்கள் எல்லாம் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய், ``கடந்த ஒரு மாதமாக ஆந்திராவில் இந்து கோயில்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. ஜெகன் அரசு இதை கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கது. இந்து மக்களின் பொறுமையை சோதித்து பார்க்க நினைக்க வேண்டாம். பாஜக தொண்டர்கள் களத்தில் இறங்கினால் ஜெகன் மோகன் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டி வரும். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல், துபாக்கா இடைத்தேர்தல் முடிவுகள்தான் ஆந்திராவிலும் ஏற்படும். நடக்கவிருக்கும் உள்ள திருப்பதி மக்களவைத் தொகுதித் தேர்தலில் ஜெகனுக்கு எங்கள் கட்சி அதிர்ச்சி அளிக்கும். திருப்பதி மக்கள் பைபிள் வேண்டுமா அல்லது பகவத் கீதை வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள்ளும் நேரமிது" என்று முழுமுழுக்க ஜெகனை குறிவைத்து ஆவேசமாக பேசினார்.
இதேபோல், நடிகர் பவன் கல்யாணோ, ``சமீபத்தில் பாகிஸ்தானில் இந்து சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது என்று கேள்விப்பட்டோம். இதே சம்பவம் தற்போது ஆந்திராவிலும் நடக்கிறது என்பதை உணரும்போது நாம் ஆந்திராவில் இருக்கிறோமா? பாகிஸ்தானில் இருக்கிறோமா? எனக் கேட்கத் தோன்றுகிறது" எனக் கூறியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு, ``ஜெகன் கிறிஸ்தவராக இருந்தாலும், தனது அதிகார பலத்தால், இந்து மக்களை அவரின் மதத்திற்கு மாற்ற நினைப்பது தவறு. இந்துக்களிடையே பயத்தை உண்டாக்கி, அதன்மூலம் அவர்களை மதமாற்றம் செய்து விடலாம் என நினைக்கிறார் போல. ராமர் சிலையை சேதப்படுத்தி குளத்தில் வீசிய சம்பவம் ஆந்திர மண்ணுக்கு மிகப்பெரிய அவமானம். முதல்வர் பதவி போன்ற ஒரு பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிப்பதோ அல்லது உருவாக்க நினைப்பதோ தவறு. ஜெகன் ஆட்சிக்கு வந்த கடந்த 18 மாதங்களில் 127 இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை" என்றுள்ளார்.
இவர்கள் இப்படி கூற முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ``இந்த செயல்களை யார் செய்தாலும் கட்சி, சாதி, மத வேறுபாடின்றி அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர். கலியுகம் முடிவுக்கு வந்து விட்டதோ என எண்ணும் அளவுக்கு குற்றங்கள் அதிகரித்துவிட்டன. பக்தி, பயம் இல்லாத காலம் வந்து விட்டது. கடவுளை வைத்து அரசியல் செய்யும் இந்தக் காலகட்டமே கலியுகத்தின் கடைசி காலம் என தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்று கூறியுள்ளார். இப்படி ஆந்திர அரசியல் களம் ராமர் கோயிலை வைத்து பரபரப்பை கிளப்பி வருகிறது.
- மலையரசு