சன்னிலியோனுடன் ஒப்பிட்டு கருத்துத் தெரிவித்த இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதால் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஏதாவது கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடிச் சர்ச்சையில் சிக்குவது இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு வாடிக்கை. சமீபத்தில் மகளிர் தினத்துக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், பெண்களை சன்னி லியோனுடன் ஒப்பிட்டுக் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, “நடிகை சன்னி லியோன் ஆண்களுக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கிறாரோ, அதுபோல் எல்லா பெண்களும் ஆண்களை மகிழ்விக்க வேண்டுமென விரும்புகிறேன்” என்ற சர்ச்சை கருத்தைப் பதிவிட்டு இருக்கிறார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் சமூக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவாவை சேர்ந்த சமூகநல அமைப்பைச் சேர்ந்த விசாகா என்பவர் போலீசில், வர்மா மீது புகார் கொடுத்தார். மும்பையிலும் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே ராம்கோபால் வர்மா மன்னிப்புக் கேட்காவிட்டால் அவரது படத்தில் பணியாற்றுவதை புறக்கணிக்கப் போவதாக் சில திரைப்பட தொழிலாளர்கள் சங்கங்கள் முடிவு செய்தது. நிலமை விபரீதமாவதை உணர்ந்த ராம் கோபால் வர்மா, இப்போது மன்னிப்புக் கேட்டுள்ளார்.
மகளிர் தினத்தில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் தான் வெளியிட்ட கருத்தால், யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருகிறேன் என்று ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.