நாடாளுமன்றம் எக்ஸ் தளம்
இந்தியா

பாஜக வெற்றிக்கு உதவிய எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்.. மாநிலங்களவையில் கூடுதல் பலம் பெற்ற தேஜகூ!

பீகாரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூன்று பேரும் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏ ஒருவரும் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மகாகட்பந்தன் கூட்டணியின் வேட்பாளர் அமரேந்திரதாரி சிங் தோல்வியடைந்தார்.

Prakash J

மாநிலங்களவைத் தேர்தலில் பிஹார் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்ததாலும் கட்சி மாறி வாக்களித்ததாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் மகாராஷ்டிரம், ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இவற்றில் தொடர்ந்து நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் 6 பேர் உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேநேரத்தில், பீகாரைச் சேர்ந்த 5 இடங்கள், ஒடிசாவைச் சேர்ந்த 4 இடங்கள் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 2 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், பீகாரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான போட்டி நிலவியது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூன்று பேரும் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏ ஒருவரும் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மகாகட்பந்தன் கூட்டணியின் வேட்பாளர் அமரேந்திரதாரி சிங் தோல்வியடைந்தார்.

மாநிலங்களவை

இதனால் பீகாருக்கான ஐந்து மாநிலங்களவை இடங்களையும் தேஜகூ வேட்பாளர்கள் கைப்பற்றினர். முன்னதாக, மாநில முதல்வராகக் கடந்த ஆண்டு பதவியேற்ற நிதிஷ் குமாரும் மாநிலங்களவைக்குப் போட்டியிடுவதாகக் கூறி வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். தற்போது அவரும் வெற்றிபெற்றுள்ளார். ஒடிஷா மாநிலத்தில் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எட்டுப் பேர், காங்கிரஸைச் சேர்ந்த மூன்று பேர் என பதினொரு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரான திலீப் ரேவுக்கு ஆதரவாக வாக்களித்து அவர் வெற்றிபெற உதவினர். பிஜு ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து முன்னிறுத்திய கூட்டு வேட்பாளர் தத்தேஸ்வர் ஹோதா தோல்வியடைந்தார். எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்ட இந்தப் பிளவால் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலங்களவையில் எதிர்பார்த்ததைவிடக் கூடுதல் பலத்தைப் பெற்றுள்ளது.