இந்தியா

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்; எந்த கட்சிக்கு ஆதரவு அதிகம்?

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்; எந்த கட்சிக்கு ஆதரவு அதிகம்?

webteam

மாநிலங்களவைத் தேர்தலில் தங்களுக்குத்தான் வெற்றி என தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் கூறிவரும் நிலையில், எந்த வேட்பாளர்களுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாரதிய ஜனதாவின் கணக்குபடி தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம் ஹரிவன்ஷுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் 91 வாக்குகள், 3 நியமன உறுப்பினர்கள் வாக்குகள், மற்றும் சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேறிய எம்பி அமர்சிங்கின் ஆதரவும் உள்ளது. இதைத்தவிர அதிமுகவின் 13 வாக்குகளும், டிஆர்எஸ் கட்சியின் 6 வாக்குகள், ஒய்எஸ்சிபியின் 2 உறுப்பினர்கள், ஐஎன்எல்டியின் ஒரு உறுப்பினர் என 117 வாக்குகள் இருப்பதாக பாரதிய ஜனதா கருதுகிறது.

இதைத் தவிர பிஜு ஜனதா தளத்தின் 9 உறுப்பினர்களும் தங்களுக்கே ஆதரவளிப்பார்கள் என பாரதிய ஜனதா எதிர்பார்க்கிறது. இதன்மூலம் மொத்தம் தற்போது 244 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 126 வாக்குகளை பெற்றுவிடலாம் என பா.ஜ.க. எண்ணுகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் ஹரிபிரசாதை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 61 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் தலா 13 உறுப்பினர்கள், தெலுங்குதேசம் கட்சியின் 6 உறுப்பினர்கள், சிபிஎம்பின் 5 உறுப்பினர்கள் பிஎஸ்பி மற்றும் திமுகவின் சார்பில் தலா 4 உறுப்பினர்கள், இரண்டு சிபிஐ உறுப்பினர்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஒரு உறுப்பினர் என மொத்தம் 109 எம்பிக்களின் வாக்குகள் கிடைக்கும்.

ஒரு நியமன உறுப்பினர் மற்றும் ஒரு சுயேட்சை எம்பியின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக காங்கிரஸ் சொல்கிறது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் வேட்பாளருக்கு 111 வாக்குகள் கிடைக்கும். 2 உறுப்பினர்களை கொண்ட பிடிபி கட்சியும், 3 உறுப்பினர்களை கொண்ட ஆம் ஆத்மி கட்சியும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளன. திமுக உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வார்களா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.