இந்தியா

பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வராதது ஏன்?: ப.சிதம்பரம்

பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வராதது ஏன்?: ப.சிதம்பரம்

webteam

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல்? என மாநிலங்களவையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பினார்.

இன்றைய மாநிலங்களவைக் கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், “பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சில்லறை விற்பனையில் குறைந்த பட்சம் 20 சதவிகிதம் குறைந்திருக்க வேண்டும். ஆனால் பெட்ரோலின் விலை கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் என்ன விலை இருந்ததோ, அதே விலையே கடந்த அக்டோபர் மாதமும் இருந்தது. டீசலின் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. 19 மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. மத்தியிலும் பாரதிய ஜனதாவே ஆட்சி செய்கிறது. இருப்பினும் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வராதது ஏன்? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய அருண்ஜேட்லி, “இது தொடர்பான வரைவு கொண்டு வந்த போது மாநிலங்கள் முதலில் அதனை ஏற்றுக் கொள்ள தயங்கின. பல கூட்டங்கள் நடத்தி விளக்கமளித்த பின்னரே மாநிலங்கள் இதற்கு இணங்கின. அதிகாரமளித்தல் குழு இதற்கான பணிகளைச் செய்தது. அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள மாநிலங்கள் முழுமையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பெட்ரோலியப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வருவது குறித்து, ஜிஎஸ்டி குழுவால் முடிவு செய்ய முடியும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில் மத்திய அரசுக்கும் உடன்பாடு தான். அதற்கு மாநில அரசுகளின் சம்மதம் முழுமையாக கிட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.