மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சியாச்சின் மலைக்கு நாளை செல்கிறார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டாணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 302 இடங்களில் கைப்பற்றியது. இதையடுத்து 2 வது முறையாக மோடி கடந்த 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில், முன்னாள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு இந்த முறை பாதுகாப்பு துறை வழங்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக அவர் நேற்று பதவியேற்றார். பதவியேற்றபின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர், ஸ்ரீபத் நாயக், பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா, ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி கரம்பிர் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அவர் தனது முதல் பயணமாக, சியாச்சின் பனிமலைக்கு நாளை செல்கிறார். இமயமலைத்தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் சியாச்சின் பனி மலை, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 21 ஆயிரம் அடி உயரம் கொண்டது. அங்கு ராணுவ நடவடிக்கைகளை அவர் பார்வையிடுகிறார். இந்த பயணத்தின் போது, அவருடன் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் செல்கிறார்.