இந்திய - ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.
மாஸ்கோவில் இன்று தொடங்கி வரும் 7-ஆம் தேதி வரை இந்திய ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டுச் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் செர்ஜி ஷோய்குவை சந்தித்து ராணுவ தொழில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும், ரஷ்ய தொழில்துறை அமைச்சர் டெனிஸுடன் இணைந்து இந்திய ரஷ்ய ராணுவ தொழில் ஒத்துழைப்பு மாநாட்டையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ சார்ந்த தொழில்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளுதல், இந்திய ராணுவத் துறையில், ரஷ்யாவின் முதலீட்டுக்கு அழைப்பு விடுத்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.