வங்கதேசத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு இந்தியா பங்களித்திருப்பதாக தெரிவித்துள்ளார் ராஜ்நாத் சிங்.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவின் வெற்றி, வங்கதேச - இந்திய நட்புறவு ஆகியவற்றின் ஐம்பதாம் ஆண்டு விழாவை டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், ''ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் 11 வீரர்களின் மறைவால் "ஸ்வர்னிம் விஜய் பர்வ்" எனப்படும் இந்த பொன்விழா தினத்தை மிகவும் எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
வங்கதேசத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு இந்தியா பங்களித்து இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் வங்கதேசம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறியதைக் கண்டு இன்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரரின் வீரம் மற்றும் தியாகத்திற்கு தலை வணங்குகிறோம். அவர்களுடைய தியாகத்திற்கு நாடு எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறது'' என்று பேசினார்.
இவ்விழாவில் 1971ஆம் ஆண்டு போரின்போது பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன. தொடக்க விழாவுக்குப் பின்னர், இந்த நிகழ்ச்சியின் காட்சிப்பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும். இதன் நிறைவு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதில் வங்காள தேசத்தை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.