இந்தியா

“தேஜஸ் விமான பயணம் மகிழ்ச்சியாக இருந்தது” - ராஜ்நாத் சிங்

webteam

உலகெங்கிலும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு நிலையை நாம் அடைந்துவிட்டோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

கர்நாடாகாவின் பெங்களூரு நகரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகை தந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டு விமானத்தின் அருகே சென்றார். அங்கு விமானத்தின் மீது ஏறி சுற்றியிருந்தவர்களை நோக்கி கைகளை அசைத்தார். 

பின்னர் தேஜஸ் போர் விமானத்தில் அவரும் விமான படை தளபதி என்.திவாரியும் பறந்து சென்றனர். 30 நிமிட பயணத்துக்கு பிறகு தரையிறங்கிய ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இது மிகவும் மென்மையாகவும் வசதியாகவும் இருந்தது. நான் ரசித்துக்கொண்டிருந்தேன். எச்.ஏ.எல், டி.ஆர்.டி.ஓ மற்றும் பல சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வாழ்த்துகள். உலகெங்கிலும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு நிலையை நாம் அடைந்துவிட்டோம். விமானப்படை தளபதி கூறியபடி சிறிது நேரம் விமானத்தை இயக்கி பார்த்தேன்” எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து விமானப்படை தளபதி என்.திவாரி கூறுகையில், “அமைச்சர் ராஜ்நாத் சிங் மிகவும் சந்தோஷப்பட்டார். ஒலியின் வேகமான மார்க் 1 ஐ நாங்கள் நெருங்கினோம்” எனத் தெரிவித்தார்.