சீனாவுடனான எல்லைப் பிரச்னை தொடர்பாக முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது முப்படைத் தளபதிகளிடம் படைகளை முழுவதுமாக தயாராக வைத்திருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கிழக்கு லடாக் பகுதியில் நடந்த இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தனர். இது குறித்து பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். மேலும், "இந்தியாவின் ஒரு அங்குலத்தைக் கூட சீனா கைப்பற்றவில்லை. நம் வீரர்களின் தியாகம் வீண் போகாது" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான சோவியத் வெற்றியின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யா புறப்படுகிறார். அங்கு மாஸ்கோவில் நடைபெறும் மாபெரும் ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்வு ஜூன் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்பாக இன்று முப்படைத் தளபதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
இது குறித்து "நி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழ் தகவல்படி சீனாவுடனான எல்லை சிக்கலில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் எனப் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், சீனா பதற்றத்தை அதிகரித்தால் அதே வழியில் பதிலளிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.