புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவை தாண்டி உலக நாடுகள் பலவும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “காஷ்மீரில் நடைபெற்றுள்ள மன்னிக்க முடியாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். போதும்.. போதும்.. நடந்தவரை போதும்..! இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது.
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்காக என் இருதயம் கலங்குகிறது. உலகைவிட்டுப் பிரிந்த தைரியமான அந்த வீரர்களின் ஆன்மா அமைதி பெற வேண்டும்” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.