ராஜஸ்தானில் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு பெண் ஒருவர் அழைத்து செல்லப்பட்ட நிலையில், அப்பெண் அழைத்து செல்லப்பட்ட ஆம்புலன்ஸின் கதவை திடீரென திறக்க முடியாமல் போயுள்ளது. இதனால் சிகிச்சை கிடைக்காமலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரத்தைச் சேர்ந்தவர், 45 வயதான சுலேகா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்துகொண்ட உறவினர்கள், அம்மாவட்டத்திலிருந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனைக்கு சென்றடைந்தநிலையில், ஊழியர்கள் ஆம்புலன்ஸின் பின்பக்க கதவைத்திறந்து சுலேகாவை மருத்துவமனையின் உள்ளே கொண்டு செல்ல விரைந்துள்ளனர்.
ஆனால், கதவை திறக்க முடியவில்லை. கிட்டதட்ட 15 நிமிடங்கள் கதவை திறக்க போராடியுள்ளனர். இருப்பினும் முடியவில்லை. எனவே, வேறு வழியில்லாமல், ஆம்புலன்ஸின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சுலேகாவை வெளியே எடுத்துள்ளனர். பின்னர், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஒருபுறம் ஆம்புலன்ஸின் கதவுகள் திறக்கப்படாததால்தான், சுலேகா இறந்து விட்டதாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் மறுபுறம், “சுலேகாவை ஆம்புலன்ஸில் ஏற்றும்போதே அவர் உயிருடன் இருந்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இதன்மூலம் அவர் முன்னதாகவே இறந்திருந்ததாகவே நினைக்கிறோம்” என்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், மாவட்ட ஆட்சியர் நமித் மேத்தாவின் கவனத்திற்கு சென்றநிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸின் கதவை திறக்க முடியாததால், பெண் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.