ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 22, 28 மற்றும் நவம்பர் 3,14 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெற்றது. 4 மாவட்டங்களைத் தவிர மற்ற 37 மாவட்டங்களில் வாக்குகள் கடந்த 20-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தான், இத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒருவர், பரப்புரையின் போது தனது சொந்த செலவில் ஏற்படுத்திய தெருவிளக்குகளை தேர்தல் தோல்விக்குப் பிறகு அகற்றியதாக குற்றச்சாட்டு எழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பஞ்சாயத்து தேர்தலுக்குப் பிறகு, ராஜஸ்தானின் ஒரு கிராமமே இருளில் மூழ்கியிருக்கும் இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
ராஜஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ல டோங்க் மாவட்டத்தில் பீப்லு (Peeplu) பஞ்சாயத்து சமிதிக்கு உட்பட்ட பகுதியில், கும்ஹாரோன் கி தானி (Kumharon Ki Dhani) என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில், இன்னும் தெருவிளக்கு வசதி இல்லாத நிலையில் நீண்ட காலமாக இருளில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான், இப்பகுதி உள்ளாட்சித் தேர்தலில், பாஜக எம்எல்ஏ ராம் சஹாய் வர்மாவின் உதவியாளர் அலோக் சர்மாவின் மனைவி பிரியங்கா சர்மா பாஜக சார்பில் போட்டியிட்டார். தொடர்ந்து, தேர்தல் பரப்புரையின் போதே விதிமுறைகளை மீறி, இந்தக் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் தெருவிளக்குகளைப் பொருத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், நீண்ட காலமாக இருளில் இருந்த தெருக்களுக்கு வெளிச்சம் கிடைத்தது.
எனினும், பிரியங்கா சர்மாவுக்கு இத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றிக் கிடைக்கவில்லை. குறிப்பாக, அவர் காங்கிரஸ் வேட்பாளர் தன்னா லாலிடம் 751 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தான், தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே, மின்வாரிய ஊழியர்கள் கிராமத்திற்கு வந்து தெருவிளக்குகளை அகற்றத் தொடங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், தேர்தலில் தோல்வியடைந்ததால் பழிவாங்கும் நோக்கில் விளக்குகள் அகற்றப்படுவதாகக் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
அதேசமயம், இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மின்வாரிய அதிகாரிகளோ, முறையான அனுமதியின்றி மின்சார இணைப்புகள் மூலம் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டிருந்ததால் அவை அகற்றப்பட்டதாக விளக்கமளித்துள்ளனர். மேலும், பாஜக எம்.எல்.ஏ ராம்சஹாய் வர்மாவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மின்கட்டணத்தை யார் செலுத்துவது என்ற பிரச்சினையால்தான் விளக்குகள் அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எத்தகைய காரணங்களாக இருந்தாலும், பஞ்சாயத்து தேர்தல் முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தக் கிராமம் மீண்டும் இருளுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில், தெரு விளக்குகளை அகற்றுவதை நிறுத்தக் கோரி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் மின்கட்டணத்தைச் செலுத்த முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தல் வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு மக்களுக்கான அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டிய நிலையில், ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.