உடலுக்குள் 75 ஊசிகளுடன் வாழும் ரயில்வே ஊழியரைக் கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் பத்ரிலால் மீனா. வயது 56. ரயில்வே ஊழியரான இவருக்கு திடீரென்று கால் பாதத்தில் வலி. டாக்டரிடம் சென்றார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் காலுக்குள் ஊசிகள் புகுந்திருப்பது தெரியவந்தது. ஆபரேஷன் செய்து அதை நீக்கினர். இதோடு பிரச்னை முடிந்தது என்று நினைத்த பத்ரிலாலுக்கு அடுத்துதான் காத்திருந்தது அதிர்ச்சி. கழுத்தில் வலி ஏற்பட, திரும்பவும் டாக்டரை பார்த்தார். அவர், மும்பை ரயில்வே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மும்பை டாக்டர்கள் கழுத்தில் எஸ்க்ரே எடுத்துப் பார்த்தால், அவர்களுக்கு மயக்கம் வராத குறை. பின்னே, தொண்டை முழுவதும் ஊசிகள் தொங்கிக் கொண்டிருந்தால்? மொத்தம் 75 ஊசிகள். கழுத்தில் மட்டும் 40!
ஆபரேஷன் பண்ணாமல் இந்த ஊசிகளை எடுக்க வாய்ப்பில்லை என்று முடிவெடுத்த டாக்டர்கள், மற்றொரு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பத்ரிலாலில் உடல் நிலை மோசமானது. அவர் மகன் கூறும்போது, ‘கடந்த 4 மாதங்களாக காலில் வலி இருந்ததால் மருத்துவமனை சென்றோம். ஆபரேஷன் மூலம் காலில் இருந்த ஊசிகளை அகற்றினோம். இங்கு எடுத்த எக்ஸ்ரேயில் கழுத்தில் ஏகப்பட்ட ஊசிகள் இருப்பதைக் கண்டு பயந்துவிட்டோம். இது எப்படி உள்ளே சென்றது தெரியவில்லை’ என்றார்.
‘இந்த எல்லா ஊசிகளுமே உடலின் உள் உறுப்புகளை ஒன்றும் செய்யவில்லை. இது அதிசயம்தான். சுயநினைவோடு யாரும் இவ்வளவு ஊசிகளை முழுங்கியிருக்க வாய்ப்பில்லை. இதை அகற்ற ஆபரேஷன் பண்ண வேண்டும். ஆனால், அவருக்கு நிரிழிவு நோய் இருப்பதால், அது ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கிறது. அதனால் ஸ்பெஷலிஷ்ட் டாக்டர்களிடம் ஆலோசித்து வருகிறோம்’ என்றனர் டாக்டர்கள்.
’சரி, இவ்வளவு ஊசி எப்படிய்யா உள்ளே போச்சு?’ என்று பத்ரிலாலிடம் கேட்டால், ’தெரியலையே...’ என்கிறார் கேஷூவலாக.