மருத்துவம் நாளுக்குநாள் முன்னேறி வரும் நிலையில், மருத்துவமனைகளில் தவறுதலாகச் சில சம்பவங்களும் நடைபெறுவதுண்டு. அதாவது, தவறுதலாக உடலுக்குள் ஏதாவது பொருட்களை வைத்து அறுவைச்சிகிச்சை செய்யப்படுவது உண்டு. அல்லது பயனாளிக்குப் பதில் வேறு நபருக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்படுவது உண்டு. அதேபோன்ற ஒரு சம்பவம்தான் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. எனினும், கடைசிக் கட்டத்தில் அறுவைச்சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (60). பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசுவதில் சிரமம் உள்ள இவருக்கு மணீஷ் என்ற மகன் உள்ளார். இவர், விபத்து ஒன்றில் சிக்கிய பிறகு கோட்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரது காலில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். இதற்காக, அவருக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி என நாள் குறிக்கப்பட்டது. அன்றைய தினம், அறுவைசிகிச்சை அரங்கிற்குள் சக்கர நாற்காலியில் மணீஷ் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்து முடிக்கும் வரை ஜெகதீஷ் அந்த அரங்கத்திற்கு வெளியில் காத்திருந்தார். அப்போது இருதய மற்றும் வாஸ்குலர் அறுவைசிகிச்சை துறையைச் சேர்ந்த சில மருத்துவ ஊழியர்கள், ’ஜெகதீஷ்’ என அழைத்துள்ளனர். அந்தப் பெயரைக் கேட்டவுடன் அரங்கிற்கு வெளியில் இருந்த ஜெகதீஷ் கையை உயர்த்தியுள்ளார். இதையடுத்து, அவர் உடனடியாக மற்றொரு அறுவைசிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதாவது, அவர்கள் தம்மை எதற்காக அழைத்துச் செல்கிறார்கள் என்பது ஜெகதீஷுக்குப் புரியவில்லை. அதேநேரத்தில், அவர்கள் தேடிய ஜெகதீஷ், இவர் இல்லை என்பதும் புரியவில்லை. இதற்கிடையே, அறுவைச்சிகிச்சை அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்ட ஜெகதீஷுக்கு டயாலிசிஸ் சிகிச்சைகளுக்களுக்கான பணிகளை மருத்துவ ஊழியர்கள் மேற்கொண்டனர். அவர்களிடம், ’தாம் ஒரு நோயாளி அல்ல; மகனைப் பராமரிக்க வந்துள்ளேன்’ எனத் தெளிவாகச் சொல்வதிற்கும் ஜெகதீஷ் சிரமப்பட்டுள்ளார். இந்த கட்டத்தில், அறுவைசிகிச்சை மருத்துவர் அந்த அறைக்குள் நுழைந்தபோது நோயாளி மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளார். தவறான நபரை அழைத்து வந்திருப்பதாக மருத்துவ ஊழியர்களிடம் அவர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, அறுவைச்சிகிச்சை நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மணீஷ், “நான் அறுவைசிகிச்சை அரங்கிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டபோது, என்னுடைய தந்தையைக் காணவில்லை. இதுகுறித்து அங்குள்ளவர்களிடம் கேட்டபோது, அவர் அறுவைச்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நான் பதறிப்போய், ’என்ன அறுவைசிகிச்சை’ என்று கேட்டேன். அதன்பிறகே நடந்த விவரத்தைக் கூறினார்கள். இது, மிகவும் அலட்சியப்போக்கு. இந்த குழப்பத்திற்குப் பின்னால் இருப்பவர்கள் மீது மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. எனினும், இந்தச் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.