பணத்தைப் பாதுகாக்கப் பலரும் பல வழிகளைத் தேடுகிறார். ஒருசிலர் நகையும் நிலமும் வாங்கிச் சேமிக்க, இன்னும் சிலரோ பணத்தை வங்கிப் பெட்டகங்களில் சேமித்து வைக்கின்றனர். பெரும்பாலும், வீடுகளில் வைத்தால் திருடு போகும் என்ற பயத்திலேயே பணத்தை வங்கிகளில் சேமிக்க ஆரவம் காட்டுகின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு விவசாயி ஒருவர், தம்முடைய பழைய நிலத்தை விற்று ரூ.5 லட்சம் பணம் பெற்றிருந்தார். அந்தப் பணம் குடும்பத்தில் தேவையில்லாமல் செலவழிக்கப்பட்டு விடுமோ அல்லது யாராவது திருடிக்கொண்டு சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் பாலித்தீன் பையில் அப்பணத்தைப் போட்டுக் கட்டி, தனது வயலில் ஒரு குழி தோண்டிப் புதைத்து வைத்துள்ளார்.
ஒருகட்டத்தில், குடிப்பழக்கம் மற்றும் மறதியின் காரணமாக அந்த விவசாயி, பணத்தை எங்கே மறைத்து வைத்தோம் என்பதை மறந்தேவிட்டார். அவருக்கு இடம் சரியாகத் தெரியாததால், பலமுறை தேடியும் பணம் எங்கும் கிடைக்கவில்லை. இதை உணர்ந்த அவர், இறுதியில் தன் மனைவியிடமும் மகன்களிடமும் அதுகுறித்து கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சை குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் நம்பவில்லை.
ஆனால் திரும்பத் திரும்ப அவர் கூறியதை அடுத்து, நாளடைவில் பணத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் இறங்கியுள்ளனர், இதையடுத்து, வயலின் வெவ்வேறு பகுதிகளைத் தோண்டத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், அவர்களின் முயற்சிகளும் வீணாய்ப் போயுள்ளது. இந்த நிலையில், பணம் புதைக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து, அதாவது தற்போது அந்தக் குடும்பம் பருவமழை காலத்தில் விதைப்பதற்காக வயலைத் தயார் செய்யத் தொடங்கியுள்ளது. அப்போது அந்தப் பணம் இருந்த பாலித்தீன் பை தரையிலிருந்து வெளிப்பட்டுள்ளது. அந்தப் பையைக் கண்ட அவரது மனைவியும் மகன்களும் அதைத் திறந்தபோது, அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பையில், ஒரு வருடத்திற்கு முன்பு விவசாயி புதைத்த பணம் இருந்தது; ஆனால், கரையான் அந்த நோட்டுகளைச் சேதப்படுத்தி, துண்டு துண்டாகக் கிழித்திருந்தது. மீதமிருந்த சேதமடைந்த நோட்டுகளை எடுத்துக் கொண்டு அந்தக் குடும்பத்தினர் வங்கிக்குச் சென்றுள்ளனர். ஆனால், அந்த வங்கியும் சேதமடைந்த நோட்டுகளை ஏற்காமல் அவர்களைத் திருப்பியனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், கைக்கு கிடைத்தும் வாய்க்கு கிடைக்காத குறையாக அந்தக் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.