இந்தியா

தமிழக அரசு வாகனங்கள் மீது பசு பாதுகாப்பு கும்பல் தாக்குதல்: டிரைவர் மண்டை உடைப்பு

தமிழக அரசு வாகனங்கள் மீது பசு பாதுகாப்பு கும்பல் தாக்குதல்: டிரைவர் மண்டை உடைப்பு

webteam

ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழக அரசின் கால்நடைப் பாதுகாப்பு துறை சார்பாக பசுக்களை ஏற்றி வந்த 5 லாரிகள் மீது 50 பேர் கொண்ட பசுப் பாதுகாப்பு கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மண்டை உடைந்தது.

தமிழக அரசின் கால்நடைப் பாதுகாப்பு துறை சார்பாக ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த 5 லாரிகள் மீது 50 பேர் கொண்ட பசுப் பாதுகாப்பு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மண்டை உடைந்தது. தமிழக அரசின் சார்பாக வந்த இந்த வாகனங்களில் மாடுகளை ஏற்றிச் செல்வதற்கான ராஜஸ்தான் மாநில காவல்துறையினரின் அனுமதிக் கடிதம் மாடுகளை ஏற்றுச் செல்வதற்கு ஆட்சேபனை இல்லை என்பதற்கான அதிகாரிகளின் அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம்  அனைத்தும் இருந்தன. ஆனால் எதையும் கண்டுகொள்ளாத அந்த கும்பல் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்தது மட்டுமில்லாமல் வாகன ஓட்டுநர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதில் ஒரு ஓட்டுநரின் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய அனுமதியோடு பசுக்களை ஏற்றி வந்த வாகனங்களை 50 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. அந்த கும்பல் தமிழக அதிகாரிகள், வாகன ஓட்டுநர்கள், கிளீனர்கள் அனைவரையும் தாக்க முற்பட்டது. மேலும், பசுக்களை வாகனங்களிலிருந்து இறக்கிவிட்டு லாரிகளை தீ வைத்துக் கொளுத்தவும் முயற்சித்துள்ளனர். மிகப்பெரிய அசம்பாவிதம் நடப்பதற்குள் காவல்துறையினர் வந்து அதிகாரிகள் உட்பட அனைவரையும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பசுக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை பார்மர் மாவட்ட காவல்துறை அதிகாரி ககன்தீப் சிங்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்ட சைய்னராம், கமலேஷ், விக்ரம், ஜஸ்வந்த் ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்காத 7 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி ககன்தீப் சிங்லா தெரிவித்தார்.